கடந்த சில நாட்களாகவே அரையாண்டு விடுமுறை தொடர்பாக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வந்தது. அதாவது கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் அரையாண்டு தேர்வு குறைக்கப்படலாம் எனவும், இந்த ஆண்டு 9 நாட்கள் மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை 12 நாட்கள் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. இந்த நிலையில் பள்ளி நாட்காட்டியில் நிர்ணயிக்கப்பட்டிருந்த விடுமுறை அட்டவணைப்படியே விடுமுறை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்த பிறகு, ஜனவரி 5-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். வழக்கமாக அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் மாணவர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.