அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இங்கு முருகனை வழிபடக் கூடிய உகந்த நாளான வளர்பிறை சஷ்டி மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில் 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை ஒரு மணி முதல் கடலில் புனித நீராடி நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராட சுமார் 500 மீட்டர் தூரம் வரை காத்திருந்து புனித நீராடினர். மேலும் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மூத்த குடிமக்கள் வரிசையில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். கோவில் வளாகத்தின் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருச்செந்தூர் கோவில் திருவிழா போல காட்சியளித்தது. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.