மதுரை, அக்.1-
இடைத்தேர்தலுக்கு பின் தவெக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கும் சூழலில், மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இரு எம்எல்ஏ-க்களும் அமைச்சரவையில் இடம்பெற தங்களின் வழிகளில் முயற்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின் தவெக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்ய முதல்வர் விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முதல்வரின் லண்டன் பயணத்திற்கு முன்பு இருந்தே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. அமைச்சர்களில் செயல்படாதவர்கள் மற்றும் சர்ச்சையில் சிக்குபவர்களை பதவியில் இருந்து நீக்க விஜய் ஆலோசித்திருக்கிறார். அதேபோல் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையை வேறொருவரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில் விஜய் பாலாஜி, ஜெகதீஸ்வரி, தென்னரசு, வினோத் ஆகியோர் அமைச்சர
வையில் இருந்து நீக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் மதுரையைச் சேர்ந்த ஒரு தவெக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளன. மதுரையில் ஏற்கனவே சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராக இருக்கின்ற
னர். ஆனால் மதுரை மாநகராட்சி எல்லையில் எந்த அமைச்சரும் இல்லை. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தில் தொடக்க காலம் முதலே இருந்து வரும் கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் தங்கப்பாண்டி விஜய்யுடன் தொடக்க காலம் முதலே பயணித்து வருபவர். வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் நிகழ்வில் உடன் இருந்து பணியாற்றியவர்.
அதேபோல் கல்லாணையும் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்தனர். இவர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமானவர். இதனால் கல்லாணைக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அவரின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே 2 தொகுதிகள் இருக்கும் சூழலில், அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால், அது சிடிஆர் நிர்மல்குமாருக்கு ஒரு செக் போல் அமையும்.
சிடிஆர் நிர்மல்குமாரின் ஆட்டமும் அதிகமாக இருப்பது தொடர்பாக நேரடியாக விஜய்யிடம் புகார் சென்றிருக்கிறது. குறிப்பாக மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவை நிர்மல்குமார் நடத்திய விதம் விஜய்யிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கோயிலுக்கு வந்த போது, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அம்மா ருக்மணியிடம் விஜய் ஆசி பெற்றிருந்தார். இதனால் மதுரையில் புதிய பவர் செண்டரை உருவாக்க தவெக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.