அமித்ஷாவை பன்னீர்செல்வம் திடீரென்று டெல்லி சென்று சந்தித்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை மாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற பீதி அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மூத்த தலைவர்களிடம் கூட பேசாமல் இரு நாட்களாக அமைதி காத்து வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும், பன்னீர் செல்வம் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டவர். அப்போது முதல் பொதுச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணி பிரிந்து, மீண்டும் ஒன்றிணைந்தது. அதை தொடர்ந்து பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவரும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்டனர்.

இந்த நிலையில் வருகிற 15-ம் தேதி முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக பன்னீர் அறிவித்தார். அதை தொடர்ந்து மயிலாப்பூர் ஆடிட்டர் உதவியுடன் திடீரென்று ரகசியமாக திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்றார் பன்னீர் செல்வம். அங்கு அமித்ஷா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது தங்களை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் என்.டி.ஏ. கூட்டணியில் சேர்க்க வேண்டும். அதற்கும் முடியாவிட்டால், தனிக்கட்சி தொடங்கி த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கப் போகிறேன் என்று அமித்ஷாவிடம் கூறியுள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க மறுத்து வருவதால், அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதியவரை நியமிக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து வருகிறார். இதை அமித்ஷா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லி சென்ற தகவல் வெளியில் தெரிந்து விட்டதால், சென்னை திரும்பிய பன்னீர், அமித்ஷாவை சந்தித்ததை ஒப்புக் கொண்டார்.

இந்தநிலையில் இது குறித்து எந்த தகவலையும் இதுவரை அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசாமல் இருப்பதும் அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சில தலைவர்கள் துணையுடன் தன்னை வீழ்த்தி விட்டு புதிய அணி அமைக்க அமித்ஷா திட்டமிட்டிருக்கலாம் என்றும் எடப்பாடி சந்தேகப்படுகிறார். இதனால் கடந்த இரு நாட்களாக மன உளைச்சலில் உள்ளதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பு நிலவுகிறது.