பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் தொடர்பாக தேர்தல் கமிஷனில் முறையிட்டு வந்தனர். பல கடிதங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய தேர்தல் கமிஷன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பான அந்த கடிதத்தில்,
டாக்டர் அன்புமணி ராமதாசின் பதவிக்காலம் கடந்த 28-5-2025 அன்று காலாவதியாகி விட்டது என்றும், புதிய தலைவராக டாக்டர் எஸ்.ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 30-5-2025 முதல் டாக்டர் ராமதாஸ் கட்சியின் புதிய தலைவராக இருப்பதாகவும் கடிதங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும். மேலும் டாக்டர் அன்புமணி ராமதாசே கட்சியின் தலைவராக உள்ளார். நீங்கள் (டாக்டர் ராமதாஸ்) கட்சியின் தலைவராக இருப்பதாகக் கூறினால், கட்சியின் நிர்வாகிகள் தொடர்பான விஷயத்தைத் தீர்க்க பொருத்தமான கட்சி அமைப்பு அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளுங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், பா.ம.க. தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த கடிதம் டாக்டர் ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.