சேலத்தில் நேற்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடந்து நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் மல்க தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

செயற்குழுவும், பொதுக்குழுவும் நேற்று முன்தினம் முதலே களைகட்டத் தொடங்கி விட்டது. பொதுக்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். என்னிடத்தில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க ஒரு மணி நேரம் தேவை. நான் வளர்த்த பிள்ளைகள் தான் என்னை தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நல்ல முடிவு எடுப்பேன்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும். தனது கனவில் தாய் வந்ததை நினைத்து மனம் உடைந்து கண்ணீர் சிந்தினார். அப்போது தொண்டர்கள் அழக் கூடாது ஐயா என கூறினர். பிள்ளையை நான் சரியாக வளர்க்கவில்லை என கனவில் தாயிடம் அழுதேன். என்னை 20- 30 துண்டுகளாக கூட வெட்டி வீசி இருக்கலாம், போய் சேர்ந்திருப்பேன். சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள். 100-க்கு 95 சதவீத பாட்டாளி மக்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள். அன்புமணி என்னை நெஞ்சிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டார்.

30 ஆண்டாக மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்த ஜி.கே.மணியை அவமானப்படுத்தினால் என்னால் பொறுக்க முடியாது. நல்ல முடிவை அது கொடுக்கும். என்னைப்போன்ற ஒரு தகப்பன் உலகில் வேறு யாருக்காவது உண்டா? அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்? அன்புமணி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என செல்லும் இடங்களில் எல்லாம் கேட்கிறார்கள். நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.

அன்புமணியின் பின்னால் 5 சதவீதம் பேர் வட இல்லை. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும். நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. பதவிக்கு வரமாட்டேன் என்ற எனது சத்தியத்தால் தான் நீ 36 வயதில் மத்திய அமைச்சராக ஆனாய். கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை. நான் நினைப்பது போன்ற வெற்றி தேர்தலில் கிடைக்கும். அன்புமணி நினைப்பு வந்துவிட்டால், தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை. தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது என்றார்.