அனுமன் ஜெயந்தியை முன்னிட்டுநாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலைகள் சாத்தப்பட்டது.
மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அதிலும் மார்கழி அமாவாசையில் வரும் இந்த விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவை அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரம்மாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோயிலில் தினசரி அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அப்போது நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், 1008 லிட்டர் பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பிற்பகல் ஒரு மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பார். அனுமன் ஜெயந்தியையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.