இலங்கையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மேலும் வலுவடைந்து புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதும் ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் புயலுக்கு சூட்டப்பட உள்ளது. வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கையை ஒட்டி உள்ள கடற்கரை வழியாக நகரும். புயல் உருவாகி தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. புயலால் நாளை தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை, புயல் சின்னம் எதிரொலியாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதே போல பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று 28, 29, 30-ம் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.