சென்னை, அக். 4-

சென்னைக்கு ராகுல் காந்தி வரப்போகிறார்.. இதற்காக மாணவர்களின் குரல் நிகழ்ச்சிக்கு இப்போதே களைகட்டும் ஏற்பாடுகள் ஜரூராக ஆரம்பமாகி உள்ளன.

5 லட்சம் மாணவ-மாணவிகளை திரட்ட வேண்டும் என்பதற்காக நிர்வாகிகளுக்கு டார்கெட் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. ஆனால் அதேசமயம், பணம் வசூல், ரசீது இல்லாதது, கணக்கு காட்டுவது, நிர்வாகிகளின் கெத்து பதில், என இப்போதே சர்ச்சைகள் தமிழக காங்கிரஸில் வெடிக்க துவங்கி விட்டது.. அதை பற்றின பிரத்யேகமான தகவல் ஒன்றும் நமக்கு கிடைத்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஏற்பாட்டில் அக்டோபர் 10-ந்தேது நடக்கும் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னைக்கு வருகிறார் ராகுல்காந்தி. அவருக்கு சிறப்பான ஏற்பாடுகளை தந்து அசத்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் தீவிரமாக இருக்கிறார்.

அதேபோல, மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கல்லூரி மாணவர்களை திரட்டுவதும் வேகமெடுத்துள்ளது. சென்னையில் உள்ள அரசு கல்லூரி மாணவர் சங்க நிர்வாகிகளிடம் மாணிக்கம் தாக்கூர் பேசியபோது, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கல்லூரி மாணவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம்.

இதனால், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம், ஒவ்வொருவரும் 5 கல்லூரிகளில் பேச வேண்டும், ஒரு கல்லூரியிலிருந்து 1000 மாணவர்கள் என 5,000 மாணவ மாணவிகளை அழைத்து வர வேண்டும். இதனை சக்சஸ்ஃபுல்லாக செய்து முடிப்பவர்களுக்குத்தான் கட்சியில் பொறுப்புகள் தொடர்ந்து கொடுக்கப்படும். இல்லாவிட்டால் பொறுப்புகள் பறிக்கப்படும் என எச்சரித்துள்ளாராம் மாணிக்கம் தாக்கூர். அதனால்தான், இந்த நிகழ்ச்சிக்காகவே 5 லட்சம் மாணவ-மாணவிகளை திரட்டி ராகுல்காந்தியை திக்குமுக்காட வைக்கப்போகிறேன் என சொல்லி வருகிறாராம்.

இதனிடையே, இந்த நிகழ்ச்சிக்காக கட்சியிலும் வெளியிலும் நிதி திரட்டுகிறார்களாம் மாணிக்கம் தாக்கூரின் நட்பு வளையத்தில் உள்ள ஒரு க்ரூப்... காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என தொடங்கி பதவியில் உள்ள ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் லட்சங்களில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர், “எங்களிடம் லட்சக்கணக்கில் பணம் ? அமைச்சர்களிடமும் எம்.எல்.ஏ., எம்பி.க்களிடமும் கேட்டு வாங்குங்கள். அவர்களிடத்தில் தான் பணம் இருக்கிறது” என்று ஜகா வாங்குகிறார்களாம். இதனால் பணம் தராத நிர்வாகிகளின் யார் யார் என்ற லிஸ்ட்டும் மாணிக்கம் தாக்கூரிடம் சென்றிருக்கிறது. அப்படியானால் பணம் தராத நிர்வாகிகள் மீது பதவி பறிப்பு நடவடிக்கை கட்டாயம் பாயலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இதற்கெல்லாம் பணம் தராத அந்த நிர்வாகிகள் அசரவேயில்லையாம்.. பதவியிலிருந்து நீக்கினால் நீக்கிக்கொள்ளட்டுமே, காங்கிரஸ் கட்சியில் பதவியிலிருந்து எங்களுக்கு என்ன பிரயோஜனம் ? நாலு பேரு எம்.பி.யாக வருவதற்கும், 8 பேர் எம்எல்ஏவாக வருவதற்கும் நாங்கள் உழைக்கணுமா? உழைச்சாலும் என்ன பலன் கிடைக்கப்போகுது? அதனால பதவியிலிருந்து மட்டுமல்ல, கட்சியிலிருந்து நீக்கினால் கூட எங்களுக்கு கவலை இல்லை... சந்தோஷம்தான்” என்று கூலாக சொல்லி கொண்டிருக்கிறார்களாம் பணம் தராத நிர்வாகிகள்.

இது ஒருபுறம் இருக்க, வசூலிக்கப்படும் பணத்துக்கு கட்சியின் பெயரில் எந்த ரசீதும் தரப்படுவதில்லையாம்... ரசீது தராமல் வசூலிக்கப்படும் பணத்திற்கு எப்படி கணக்கு காட்ட முடியும் ? என்கிற சர்ச்சை இப்போதே எழுந்துள்ளது... 10 கோடி ரூபாய் வசூல் செய்ய டார்கெட் நிர்ணயித்துக்கொண்டு மாணிக்கம் தாக்கூர் நட்பில் உள்ள ஒரு க்ரூப், களத்தில் குதித்துள்ளது.

5 லட்சம் மாணவ-மாணவிகளை திரட்டும் சக்தி காங்கிரஸுக்கு இல்லை என்பது ஒருபுறமிருந்தாலும், ஒருவேளை 5 லட்சம் எண்ணிக்கையில் மாணவ மாணவிகளை திரட்டினாலும் கூட இந்த நிகழ்ச்சிக்கு அதிகப்பட்சம் 1.5 கோடி செலவாகலாம். அப்படிப்பார்த்தால், 10 கோடி திரட்டி அதில், 1.5 கோடியை செலவு செய்துவிட்டு, மீதமுள்ள தொகையை கட்சி கணக்கில் செலுத்துவார்களா? என்கிற கேள்வியை இப்போதே கேட்கத் தொடங்கியுள்ளதாம் ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலு ஆதரவாளர்கள் தரப்பு.

ஆக, ராகுல்காந்தியின் வருகைக்காக ஒரு பக்கம் 5 லட்சம் மாணவர்கள் என்ற பிரமாண்ட இலக்கு.. இன்னொரு பக்கம் ரூ.10 கோடி வசூல் என்ற பேச்சு.. அக்டோபர் 10-ந்தேதி நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே தமிழக காங்கிர

ஸுக்குள் இந்த 2 விஷய

ங்களும் பெரிய விவாதமாக மாறியிருக்கிறது.