மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேரவை அரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டதுடன், 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டன.


மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., தலைமையில் இன்று (11.10.2026) நடைபெற்ற இவ்விழாவில், மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்று, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், செல்லம்பட்டி, உசிலம்பட்டி மற்றும் சேடபட்டி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் நிர்மல் குமார் விழாவைத் தொடங்கி வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார்.


கர்ப்பிணிப் பெண்களின் நலன், தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தகைய சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒரே இடத்தில் பல கர்ப்பிணிப் பெண்களை ஒருங்கிணைத்து, பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தி சீர்வரிசைகள் வழங்கப்பட்டது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.


73 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா


இதனைத் தொடர்ந்து, உசிலம்பட்டி பேரவை அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சமூக நீதித்துறையின் கீழ் பேரையூர் வட்டம், இ.கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 73 பயனாளிகளுக்கு ரூ.92.78 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.


வீட்டுமனை இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு நில உரிமையை வழங்குவதன் மூலம், அவர்களுக்கான குடியிருப்பு வசதியை உறுதிப்படுத்தவும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவும் இத்தகைய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


இந்நிகழ்ச்சிகளில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் SOP விஜய் மகாலிங்கம், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி, உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார், இ.ஆ.ப., மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூஙகொடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.