சென்னை, அக். 18-

பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதற்கான வேட்டி, சேலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தின் கீழ் புதிய ரகங்களில் வேட்டி, சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரகங்களுக்கான நெசவுக் கூலியினை உயர்த்தி வழங்க வேண்டு

மென நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், புதிய ரகங்களை உற்பத்தி செய்வதால் ஏற்படும் கூடுதல் செலவு மற்றும் நெசவாளர்களின் பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய ரக வேட்டி மற்றும் சேலை ரகங்களுக்கான நெசவுக்கூலியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, பெடல்தறியில் உற்பத்தி செய்யப்படும் சேலை ஒன்றுக்கு 125 ரூபாய் 72 காசுகளும், வேட்டி ஒன்றுக்கு 49 ரூபாய் 99 காசுகளும் புதிய கூலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் சேலை ஒன்றுக்கு 54 ரூபாய் 81 காசுகளும், வேட்டி ஒன்றுக்கு 23 ரூபாய் 34 காசுகளும் புதிய கூலியாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. அதற்காக கூடுதலாக தேவைப்படும் 13 கோடியே 66 லட்சம் ரூபாய் நிதியினை இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.