தென்காசி, அக். 17-
தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டு 3 அறைகள் தரை மட்டமாகின.
கலிங்கப்பட்டியில் இருந்து அ.கரிசல்குளம் செல்லும் ரோட்டில் சிவகாசியை சேர்ந்த முருகன் 50, பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
மழை வருவது போல் இருந்ததால், மேலாளர் மகேஸ்வரன் தொழிலாளர்களை வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் வெளியேறிய நேரத்தில் ஆலையில் மின்னல் தாக்கியது. அப்போது வெடிமருந்து அறையில் இருந்த பொருட்கள் வெடித்துச் சிதறின. தீ அருகிலிருந்த அறைகளுக்கும் பரவியதில் 3 அறைகள் தரைமட்டமாகின. இரண்டு மரங்கள், தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் நான்கு சக்கர வாகனமும் தீக்கிரையாகின.
தகவலறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், மூலப்பொருட்கள் சேதமடைந்தன. கரிவலம்வந்தநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.