தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பூலானந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குளத்தின் இரண்டாவது மடை திடீரென உடைந்து, குளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் வெளியேறி அருகே இருந்த சுமார் 200 ஏக்கர் விளைநிலங்களை மூழ்கடித்தது. இதனால் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலங்களில் நெல் நாற்றுகள் நீரில் மூழ்கிய நிலையில், குளத்தின் கரையில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் காரணமாக ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க விவசாயிகள் உடனடியாக அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் உத்தமபாளையம் நீர்வள ஆதாரத்துறை (பொதுப்பணித்துறை) உதவிசெயற்பொறியாளர் மல்லிகா உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட மடையைப் பார்வையிட்டுத் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த உதவி செயற்பொறியாளர் மல்லிகா, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும், செங்குளம் கரையில் 50 அடி தூரத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரைச் சம்பந்தப்பட்ட பணியாளர்களை வரவழைத்து உடனடியாக அப்புறப்படுத்திய இவரது துரித செயல்பாடு பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகத் தடுப்பு அமைத்ததுடன், கரையைப் பலப்படுத்தும் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
அதேவேளையில், திடீர் மடை உடைப்பால் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் நாற்றுகள் முற்றிலும் நீரில் மூழ்கிப் பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உடனடியாக நீர்வள ஆதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்ய வேண்டும். பயிர் சேதத்தைக் துல்லியமாகக் கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக உரிய இழப்பீட்டுத் தொகையையும் நிவாரணத்தையும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.