சிவகாசி, அக். 15:
சிவகாசி ரயில்வே மேம்பாலத்தில் தியாகி சங்கரலிங்கனார் பெயர்ப்பலகை வைக்கப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாளையொட்டி, சிவகாசியில் மாநகர திமுக சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகரச் செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில், சிவகாசி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் கோபிநாதன், சிவகாசி மாநகரப் பகுதிச் செயலாளர்கள் அ. செல்வம், கருணாநிதி பாண்டியன், மாநகர மன்றத் தலைவர் சங்கீதா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சண்முகராஜன், மாவட்டப் பிரதிநிதி ராஜேஷ், பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெயர்ப்பலகை வைக்கப்படாததால் அதிருப்தி
சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்திற்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு அவரது பெயர்ப்பலகை வைக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10 மாதங்களைக் கடந்தும், மேம்பாலத்தில் தியாகி சங்கரலிங்கனார் பெயர்ப்பலகை வைக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில், மேம்பாலத்தில் அவரது பெயர்ப்பலகையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.