கிராமசபை கூட்டத்தில்
மதுக்கடைகள் வேண்டாம் என சொல்கிறவர்கள்
குடிக்க மாட்டோம் என ஏன் தீர்மானம் நிறைவேற்றுவதில்லை?
ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை, அக். 16-
மதுபான கடைகள் வேண்டாம் என கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுபவர்கள், மதுக்கடைக்கு போக மாட்டோம் என ஏன் தீர்மானம் நிறைவேற்றுவதில்லை என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை, கருப்பாயூரணி பகுதியில் 40 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இருந்தது. தற்போது அப்பகுதியில் பள்ளிகள், நர்சிங் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளதால் கடந்த காலங்களில் மதுபானக்கடை திறக்க அதிகாரிகள் மறுத்து வந்தனர். தவெக அரசு பொறுப்பேற்றதும் இந்த பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையை சேர்ந்த சுப்பையா என்பவர், கருப்பாயூரணி மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘’கருப்பாயூரணி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பள்ளி, மருத்துவமனைகள் அதிகம் உள்ளது. பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே மதுபானக் கடைகள் செயல்பட தடை உள்ளது. ஆனால், இங்கு பள்ளி அருகே செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பது சட்ட விரோதம்.
இதுதொடர்பாக கிராம ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். எனவே, வீதிகளை மீறி திறக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘’மனமகிழ் மன்றம் இந்த கிராமத்தில் தேவையில்லை என கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தக்கது. அதைப்போல ஊராட்சியில் உள்ள யாரும் மதுபான கடைக்கு போக மாட்டோம் என ஏன் தீர்மானம் நிறைவேற்றுவதில்லை.
மதுபான கடைக்கு மது குடிப்போர் செல்வதால் தான், மதுபான கடைகள் அதிக அளவு திறக்கப்படுகின்றன. இந்த மனு பொதுநல நோக்கத்திற்கானது அல்ல. உள் நோக்கத்துடன் தொடரப்பட்டது’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.