புதுடெல்லி, அக். 13-

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த பல பத்தாண்டுகளாக ஜந்தர் மந்தர், மக்களுக்கான உரிமை மற்றும் நீதிக்கான போராட்டக்களமாக இருந்துவந்தது. இந்நிலையில், இனிவரும் காலங்களில் இந்த இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர், தற்போது அந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய 3 இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு 2022 ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்பட்ட முந்தைய நிலையான உத்தரவு எண் L&O/48/22-ல் பகுதியளவு திருத்தம் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் டெல்லியில் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இது போன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.